
சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சென்ட்ரல், பெரம்பூர், வில்லிவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
வங்ககடலில் உருவாகியுள்ள புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த 15ம் தேதியன்று வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதன் பின் புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னையில் திடீரென மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வரும் 25ம் தேதிக்கு பின் வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் 10 செ.மீ., சிவகங்கையில் 8 செ.மீ., பேச்சிப்பாறையில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.