
தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றனர்.
இந்த குண்டுகள் காவல்நிலையத்தில் இருந்த போர்டில் பட்டு கீழே விழுந்தது. சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் அனைத்து பாரா டூட்டி காவலர்களும் 24மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்கள் வேலை செய்யாததால் தான் குண்டு வீசிய நபர்கள் குறித்து கண்டுபிடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 6 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு காவல் ஆணையர் மற்றும் நுண்ணறிவு துணை ஆணையர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் வேப்பேரி காவல் நிலையத்தில் ஆலோசனை நடத்தினர். அதில் குற்றவாளிகளை பிடிப்பதற்கான யூகங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அதன்படி அதிகாலையில் தேனாம்பேட்டை பகுதிகளில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் குறித்தும் பழைய குற்றவாளிகள் கொலைக்குற்றவாளிகள் என்று 100க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த குண்டு வீசப்பட்டவர்களில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.