
தருமபுரி
தருமபுரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலைய வளாகத்தை திறந்து உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிய மக்கள் அப்போ புதிய கட்டடங்கள் அம்மாவுக்காக காத்திருந்தது இப்போ யாருக்காக காத்திருக்கு? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சுமார் ரூ.2 கோடியில் புதிதாக பேருந்து நிலைய வளாகம் கட்டப்பட்டு உள்ளது.
மொரப்பூர் பேருந்து நிலையம் வழியாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கல்லாவி, கடத்தூர், அரூர் உள்ளிட்டப் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலைய வளாகத்தில் இரண்டு அடுக்குகளில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் 16 கடைகள் உள்ளன.
பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது, இருந்தும் பேருந்து நிலைய வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, பயன்பாடின்றி உள்ள பேருந்து நிலைய வளாகத்தை உடனே பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், முன்னர் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் அம்மாவுக்காக (ஜெயலலிதாவுக்காக) காத்திருந்தன.
உதராணமாக ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றபோது புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்ட பிறகும் திறக்கப்படாமலேயே ஜெ. சிறையில் இருந்து திரும்பும் வரை காத்திருந்தன.
கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டடம் இப்போது யாருக்காக, எதற்காக காத்திருக்கிறது? திறக்க வேண்டியதுதானே? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.