
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. கோவிலின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட இந்த தீ சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதம் அடைந்தது. மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. சிலைகள், தூண்களில் விரிசல் ஏற்பட்டது. தீ விபத்து நடந்த மண்டபத்தை சீரமைக்க 12 நிபுணர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது.
இந்த தீ விபத்தால் ஆயிரங்கால் மண்டபத்திற்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என ஆய்வு செய்த நிபுணர் குழு கூறி உள்ளது. கோவில் வளாகத்துக்குள் இருக்கும் கடை ஒன்றில் கற்பூரம் கொளுத்தியதாலே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அங்குள்ள 115 கடைகளையும் இன்று நண்பகல் 12 மணிக்குள் காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
பரபரப்பான இந்த சூழ்நிலையில் னாட்சி அம்மன் கோயில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் நேற்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர்.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.