ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மூதாட்டியிடம் திருட்டு; ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த இளைஞருக்கு வலைவீச்சு...

First Published Apr 4, 2018, 10:29 AM IST
Highlights
Theft from old lady claiming money in ATM 20 thousand theft


வேலூர்
 
வேலூரில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த இளைஞரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாப்பட்டு வடுகமுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சாவித்திரி (61). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

அந்தச் சமயத்தில் அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் பணம் எடுத்து தருமாறு சாவித்திரி கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர், சாவித்திரியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். 

பின்னர் அவர், ஏ.டி.எம். எந்திரத்தில் கார்டை போட்டு பார்த்தார். இதனையடுத்து அந்த இளைஞர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை. வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சாவித்திரியிடம் தெரிவித்தார். 

உடனே சாவித்திரியும் வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பார்த்தபோது, அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாவித்ரி, வங்கி மேலாளரிடம் சென்று புகார் கொடுத்தார். 

அங்கு, சாவித்திரியின் வங்கி கணக்கை சரிபார்த்த மேலாளர், உங்கள் கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். அப்போது தான் அந்த இளைஞர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பது சாவித்திரிக்கு தெரியவந்தது.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் சம்பந்தப்பட்ட இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!