
தூத்துக்குடி
முகநூலில் பதிவு செய்துவிட்டு, கோவில்பட்டியில் உள்ள தனியார் செல்லிடப்பேசி கோபுரத்தில் இளைஞர் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் ராம் அனுமன் நகரில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 150 அடி உயர செல்லிடப்பேசி கோபுரம் உள்ளது.
இதில், சுமார் 90 அடி உயரத்தில் ஏறி ஒருவர் நிற்பதாக மேற்கு காவல் நிலைய காவலாளர்களுக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் தீயணைப்புப் படையினர் அங்கு சென்று செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி நின்று கொண்டிருந்தவரிடம் தொடர்பு கொண்டு பேசி அவரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர் இறங்க மறுத்துவிட்டார்.
விசாரித்ததில், அவர், வடக்குத் திட்டங்குளத்தைச் சேர்ந்த திருமலை சரவணன் மகன் ஜோதிரமேஷ் (22) என்பது தெரியவந்தது.
அவரது பெற்றோரை சம்பவ இடத்துக்கு அழைத்துவந்து, ஜோதி ரமேஷிடம் செல்லிடப்பேசி மூலம் பெற்றோர் பேசி, கீழே வருமாறு அறிவுறுத்தினர்.
காலை 6.30 மணிக்கு செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறிய ஜோதிரமேஷ் 9.30 மணிக்கு கீழே இறங்கி வந்தார்.
பின்னர் அவரிடம் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறியதற்கான காரணம் குறித்த கேட்டபோது, “தன்னை சிலர் தாக்கியதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” எனவும் கோரினார்.
இது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டி இருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து காவலாளர்கள் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஜோதி ரமேஷ், வியாழக்கிழமை இரவு தனது முகநூலில், வெள்ளிக்கிழமை காலை ராம்அனுமன் நகரில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்தில் நான் ஏற உள்ளேன்” என்று பதிவு செய்திருந்தார்.