
திருவாரூர்
திருவாரூரில் ஆசியக் கண்டத்திலேயே மிகப் பெரிய ஆழித்தேரோட்டம் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அடியார்கள் பங்கேற்றனர்.
சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோவில்.
பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமான திருவாரூரில் தியாகராஜர், வன்மீகநாதர் எனும் பெயர் கொண்டு கமலாம்பாளுடன் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறும். இது மிகவும் பிரசித்திப் பெற்ற விழாக்களில் ஒன்று.
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். 96 அடி உயரம் கொண்டது. அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன். இவ்வளவு புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் நேற்று ஆராவாரமாக நடந்தது.
இந்தத் தேரோட்டத்தையொட்டி ஆழித்தேர் மூங்கில் மற்றும் அலங்கார துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை ஆழித்தேர் வடம் பிடிக்கப்படுவதற்கு முன்பாக தேரடி விநாயகர் கோவிலில் சிறப்பு குடமுழுக்கு, வழிபாடுகள் நடந்தன.
பின்னர் தேர் சக்கரத்திற்கு தேங்காய் உடைத்து வழிபாடுகள் நடைபெற்றன. காலை 7.20 மணிக்கு மங்கள இசை முழங்க ஆழித்தேர் வடம்பிடிக்கப்பட்டது.
இதில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி மகாதேவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞானமகாதேவதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிகஞானசம்பந்த சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் தென்னரசு, கஜேந்திரன், உதவி ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், சிவராம்குமார், உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்.தியாகராஜன், செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஆரூரா, தியாகேசா’ என பக்தி முழக்கம் எழுப்பியபடி ஆழித்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆழித்தேருக்கு பின்னால் கமலாம்பாள் தேரும், சண்டிகேஸ்வரர் தேரும் பக்தர்களால் இழுத்து வரப்பட்டன.
ஆழித்தேரோட்ட விழாவை காண திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி, வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் சாலைகளில் மட்டுமின்றி கட்டிடங்கள், வீடுகளின் மாடிகளில் ஏறி நின்று ஆழித்தேரின் அழகை கண்டு ரசித்தனர். ஆழித்தேர் கீழவீதியில் தொடங்கி தெற்குவீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்தது.
தேரோட்ட விழாவில் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், நாராயணி நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், பாரத் டி.வி.எஸ். நிர்வாக இயக்குனர் பிரபாகரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள், விஜயராகவன் (பொறுப்பு), சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் தியாகபாரி மற்றும் பலர் பங்கேற்றனர்.