
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள கிராமம் ஒன்றில் அடிப்படை வசதிகளை கேட்டு கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கிழவிபட்டி ஊராட்சிக்கு உள்பட்டது செண்பகப்பேரி கிராமம்.
இந்தக் கிராம மக்கள், "பசுவந்தனை பிரதான சாலையில் இருந்து கீழப்பாண்டவர்மங்கலம், மேலப்பாண்டவர்மங்கலம், செண்பகப்பேரி வரை செல்லும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
தெரு விளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
நாள்தோறும் குப்பைகளை சேகரித்து சுகாதாரத்தைப் பேணிக் காக்க வேண்டும்.
குடிநீர் சீராக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கொசுத் தொல்லையை ஒழிக்க வேண்டும்.
நீர்த்தேக்கத் தொட்டியை சுத்தப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இந்தப் போராட்டத்திற்கு பகத்சிங் மன்ற மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் தலைமைத் தாங்கினார். மாவட்ட விவசாய சங்கத் தலைவர் சீத்தாராமன், பெண்கள் பாதுகாப்பு குழு மாவட்ட உறுப்பினர் சுந்தரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் பகத்சிங் மன்ற திருவேங்கடம் வட்டச் செயலர் பாண்டியராஜன், மன்ற உறுப்பினர் கொம்பையா உள்பட அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.