
தமிழக மக்கள் நாட்டுக்கே முன்உதாரணமாக இருந்தீர்கள், இப்போது சென்னையில் நடக்கும் சம்பவம் வேதனை அளிக்கிறது. அமைதி காக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே நகரின் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்களை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் போலீசார் கலைத்தனர். இதனால் சென்னையில் பஸ் மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கபட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் டுவிட்டரில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட கருத்தில், “ தமிழ்நாட்டில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இதுநாள் வரை நடந்த போராட்டத்தில் மக்கள் அறவழியில், அமைதியாக நீங்கள் இருந்தது, நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்ந்தீர்கள். உங்களின் போராட்டம் மற்றவர்களால் ஆதாயம் அடைந்துவிடக்கூடாது. அமைதியாக காக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.