மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், விரைவில் பாதிப்பு தொடர்பாக கணக்கெடுக்கும் பணி தொடங்கப்படவுள்ளதாகவும், இதனையொட்டி நிவாரண உதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு மிக்ஜம் என பெயரிடப்பட்ட நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை புரட்டி போட்டது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் இரண்டு நாட்களில் மழையானது வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டை விட தற்போது வெள்ள பாதிப்பு அதிகரித்தது. இரண்டு நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு சார்பாக பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
undefined
இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி சென்னையில் சூறாவளி காற்றோடு பெய்த மழை பாதிப்பால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. முடிச்சூர், பள்ளிக்கரனை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளும், வட சென்னை பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் இல்லாமலும், மொபைல் டவர் கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்க படகுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, பால் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது. மேலும் மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பாதிப்புகளுக்காக சுமார் 6000கோடி அளவிற்கு மத்திய அரசிடம் நிதி உதவி கோரியுள்ளது. அதில் முதல் கட்டமாக 5ஆயிரம் கோடி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிவாரண உதவி எவ்வளவு.?
இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகளவு உள்ள நிலையில், தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் ஒரு குடும்பத்திற்கு 5000 ருபாய் வழங்கப்பட்டது. எனவே தற்போதைய பாதிப்பால் அதை விட கூடுதலாக நிவாரண உதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொங்கல் தொகுப்பு மற்றும் வெள்ள பாதிப்பு நிவாரணம் வழங்கப்படும் என தெரிகிறது. நிவாரண உதவி வழங்குவது தொடர்பாக கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தி இந்த கூட்டத்தில் நிவாரண உதவி தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்