
தமிழக அரசின், ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதை அங்கீகரிக்கும் சட்ட திருத்த மசோதா, இந்தாண்டு ஜனவரி, 24ல், தமிழக சட்டசபையில், நிறைவேறியது. இதேபோல் கர்நாடகாவும் சட்டம் இயற்றியது.
தமிழகம், கர்நாடகா அரசுகளின் இந்த சட்டத்தை எதிர்த்து விலங்குகள் ஆர்வல அமைப்பான, 'பீட்டா' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்குகளை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகளின் புதிய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
இதைதொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.