பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டி போராட்டம்…

 
Published : Aug 02, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டி போராட்டம்…

சுருக்கம்

The struggle to get back the order of the construction of the petroleum chemical zone ...

நாகப்பட்டினம்

பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சீர்காழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை மத்திய – மாநில அரசுகள் பெட்ரோலிய இரசாயன மண்டலமாக அறிவித்துள்ளது.

அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி தாலுகா அகரவட்டாரம், வேட்டங்குடி, திருமுல்லைவாசல், இராதாநல்லூர், எடமணல், திருநகரி, நெப்பத்தூர், தென்னாம்பட்டினம், பெருந்தோட்டம், அகரபெருந்தோட்டம், திருவெண்காடு, மணிகிராமம், மேலையூர், திருமயிலாடி, மாதானம், கூத்தியம்பேட்டை உள்ளிட்ட 20 கிராமங்களில் பெட்ரோல் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று டெல்டா நீர் ஆதார பாதுகாப்பு அமைப்புச் சார்பில் சீர்காழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவர் கிள்ளை இரவீந்திரன் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் சூரியமூர்த்தி, சாமிநாதன், சமூக ஆர்வலர்கள் அங்குதன், ஸ்டாலின், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொள்ளிடம் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவபிரகாசம், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இமயவரம்பன் ஆகியோர் பங்கெற்றுப் பேசினர்.

அப்போது அமைப்பின் தலைவர், “முப்போகம் விளைந்த டெல்டா பகுதியில் தற்போது காவிரிநீர் மற்றும் மழை இல்லாமல் ஒருபோக சாகுபடிக்கே வழியின்றி விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் 45 கிராமங்களை தேர்வு செய்து பெட்ரோலிய இரசாயன மண்டலமாக அறிவித்திருப்பது விவசாயிகள் மற்றும் மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். பசுமை நிறைந்த சுற்றுப்புற சூழலை இந்த திட்டம் கெடுத்து இரசாயன காற்றை நாம் சுவாசிக்க நேரிடும்.

மேலும், பல்வேறு நோய்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தி உப்புநீரை மட்டுமே நாம் குடிக்கவும், குளிக்கவும் பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்படும்.

பெட்ரோலிய இரசாயன மண்டலம் செயல்படுத்தப்பட்டால், இன்னும் சில ஆண்டுகளில் டெல்டா மண் பாலைவனமாக காட்சி அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, பெட்ரோலிய இரசாயன மண்டலம் அமைக்கும் உத்தரவை திரும்ப பெற்று, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

இல்லையென்றால் நெடுவாசல், கதிராமங்கலத்தை போல சீர்காழியிலும் போராட்டம் தொடர்ச்சியாக நடக்கும்” என்று தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழுமலையாறு பாசன விவசாய சங்க செயலாளர் ராமானுஜம், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் மற்றும் விவசாயிகள், மீனவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், மக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?