மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் வீசும் துர்நாற்றம்; தொற்றுநோய் பரவுவதால் ஆத்திரத்தில் மக்கள் போராட்டம்...

First Published Mar 14, 2018, 8:11 AM IST
Highlights
The stench blowing through the steep garbage People struggle in rage because of epidemic spread ...


கடலூர்

கடலூரில் பல வருடங்களாக கொட்டப்பட்டு வரும் குப்பைகள் மலைபோல் குவிந்த் கிடப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாலும், தொற்றுநோய் பரவுவதாலும் ஆத்திரமடைந்த மக்கள், குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி எல்லைப் பகுதியான கீழ்பட்டாம்பாக்கம் திருக்குளத்தில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால், இங்கு குப்பைகள் மலைபோல் குவிந்து இப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும், மலைபோல் குவியும் குப்பைகள் அந்த வழியாக செல்லும் மின்பாதை, மின் வயரில் உராய்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதுதவிர, அதிகளவில் தேங்கும் குப்பையால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோயும் பரவி வருகிறது.  இதனால் அந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை மாற்று இடத்தில் கொட்டுவதற்காக மேல்பாதியில் ஒரு இடத்தைத் தேர்வு செய்தது. அங்கு குப்பைகளை கொட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டனர். ஆனால், இதனையறிந்த அந்தப் பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து குப்பைகளை இங்கு கொட்டக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

பின்னர், திருக்குளத்தில் வழக்கம்போல குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதில் கோபமடைந்த திருக்குளம் பகுதி மக்கள் நேற்று, திரண்டு அங்கு வந்த குப்பை லாரிகளை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகாராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால், பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து குப்பை ஏற்றி வந்த மூன்று லாரிகளை அங்கேயே ஓரமாக நிறுத்திவிட்டு நகராட்சி ஊழியர்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

click me!