நாமக்கல்லில் நூறு சதவீதம் கூடுதல் மழை பெய்தும் 79 ஏரிகளில் 9 ஏரி மட்டுமே நிரம்பியுள்ளதாம்...

First Published Nov 11, 2017, 8:06 AM IST
Highlights
The river was filled with hundred percent of the rain and only 9 lakes out of 79 lakes ...


நாமக்கல்

தென்மேற்குப் பருவமழை இயல்பைக் காட்டிலும் 100 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளபோதிலும், நாமக்கல் மாவட்டத்தில் 10 சதவீத ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு மழைப் பொய்த்துப் போனதால், கடும் வறட்சி நிலவியது. இந்தாண்டு தொடக்கத்தில் பெரியளவில் மழை இல்லை. இருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாக பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழையைப் பொருத்த வரையில் 303 மி.மீ. மழை இயல்பாகக் கிடைக்கும். ஆனால், இந்தாண்டு 615 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

இந்த மழை காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான குளம், குட்டைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும், நூறு ஏக்கர் பரப்பளவுக்கு மேல் உள்ள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகளில் வெண்ணந்தூர் அருகே உள்ள சேமூர் பெரிய ஏரி, மின்னக்கல் ஏரி, மாமுண்டி அக்ரஹாரம் ஏரி, பாலமேடு சின்ன ஏரி, இலுப்புலி ஏரி, அக்கரைப்பட்டி ஏரி, வரகூர் ஏரி, செருக்கலை ஏரி, மல்லசமுத்திரம் சின்ன ஏரி என ஒன்பது ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. பத்து ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கி இருந்தாலும், சுமார் 60 ஏரிகளில் மிகவும் குறைவான அளவே தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த மாவட்டத்திலேயே பெரிய ஏரி என்று அழைக்கப்படும் தூசூர் ஏரியில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தூசூர் ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறியது: "நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாகப் பெய்தாலும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 79 ஏரிகளில் ஒன்பது ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள 70 ஏரிகள் இதுவரை நிரம்பவில்லை.
இதற்கு கனமழை பெய்யாதது ஒரு காரணம். ஏரிகளுக்கு நீர் வரும்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாதது மற்றொரு காரணம்.

எனவே, நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி வடகிழக்குப் பருவமழையின்போது கிடைக்கப் பெறும் தண்ணீரைச் சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

click me!