
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் காலாவதியான உர மூட்டைகளை விவசாயிகளுக்கு வழங்கியதால் அதனை அவர்கள் வாங்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு கடனாகவும், ரொக்கமாகவும் உரம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மழைப் பொய்த்துப் போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் கடந்த 2013 - 2014-ஆம் ஆண்டுக்கு வந்த ஒன்பது டன் யூரியா அனுமந்தபுரம் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு காலாவதியாகி பயனற்றதாகி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ஒரு நிறுவனத்தின் பெயர் குறிப்பிட்ட யூரியா மூட்டைகளை, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தில் இருந்து லாரியில் கொண்டுவந்து கிடங்கில் இறக்கியுள்ளதாம்.
இதுகுறித்து கொள்ளிடம் ராஜன் வாய்க்கால் பாசனதாரர் சங்கத் தலைவர் ரவிசுந்தரம் கூறியது: "காலாவதி தேதி முடிந்த 25 டன் யூரியா அனுமந்தபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதை விவசாயிகள் வாங்க மறுத்துள்ளோம். எனவே, காலாவதியான உர மூட்டைகளை உடனடியாக மீண்டும் திரும்பப் பெற்றுக்கொண்டு யூரியா மூட்டைகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.