
வேலூர்
வேலூரில் ரேசன் கடையின் பூட்டை உடைத்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் காவலாளர்கள்.
வேலூர் மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அரக்கோணம் வட்டார வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான ரேசன் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்தக் கடையின் விற்பனையாளர் திங்கள்கிழமை மாலை வழக்கம்போல கடையைப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் (அதாவது நேற்று) வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அந்த விற்பனையாளர்.
பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது 25 கிலோ எடை கொண்ட நான்கு மூட்டைகளில் இருந்த அரிசி, இரண்டு பெட்டி பாமாயில், ஒரு பெட்டி சோப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 11 ஆயிரம்.
இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் நகர காவலாளர்கல் வழக்குப் பதிந்து திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.