
வேலூர்
வேலூரில் விவசாய நிலத்தில் அறுவடையின்போது ஊர்ந்துசென்ற பத்து அடி நீள மலைப்பாம்பை மக்கள் உதவியுடன் வனவர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த நரியம்பட்டு ஊராட்சி, மேல் கொத்தக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜுக்குச் சொந்தமான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது.
இங்கு நெல் அறுவடை செய்யும் பணியில் ஆண்களும், பெண்களும் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். உடனே அவர்கள் கூச்சலிட்டதால் அங்கு ஆட்கள் கூடினர்.
பின்னர், இதுகுறித்து ஆம்பூர் வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் வனவர் செந்தில், வனக்காப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.
அங்கு மக்களின் உதவியுடன் அந்த பத்து அடி நீள மலைப்பாம்பைப் பிடித்தனர். பின்னர், அந்தப் பாம்பை பல்லலக்குப்பம் காப்புக் காட்டில் கொண்டுபோய் விட்டனர்.