
நுங்கு வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் வாலிபரின் கழுத்தை அரிவாளால் நுங்கு சீவுவதுபோல அறுத்து கொன்றவர், துண்டித்த தலையோடு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை காமராஜர் சாலையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இளையான்குடி அருகே புளியங்குளத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் பூமிநாதன். இருவரும் மானாமதுரை பகுதியில் நுங்கு வியாபாரம் செய்து வந்தனர்.
வியாபாரத்தில் பூமிநாதனுக்குரிய பங்கு பணம் ₹1,500ஐ முத்துப்பாண்டி தராமல் இருந்துள்ளார். தன்னுடைய பணத்தை எடுத்து வந்து முத்துப்பாண்டி தினமும் மது அருந்தியதால் பூமிநாதன் கடுமையான கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முத்துப்பாண்டி வந்தார். இதையறிந்த பூமிநாதன் அங்கு வந்தார். அவரும் ஏற்கனவே மது அருந்தி போதையில் இருந்தார். முத்துப்பாண்டியிடம் பூமிநாதன் பணம் கொடுக்குமார் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறி, இருவரும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டுள்ளனர்.
கடை வாசலில் முத்துப்பாண்டியை பிடித்த பூமிநாதன் அவரை கீழே தள்ளி தன்னிடம் இருந்த நுங்கு வெட்டும் அரிவாளால் முத்துபண்டியின் கழுத்தை சீவினார். இதை பார்த்ததும் அருகில் இருந்த மக்கள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடலில் இருந்து தலையை வெட்டியெடுத்த பூமிநாதன், கையில் முத்துப்பாண்டியின் தலையையும், அவர் கொண்டு வந்த கூடையையும் எடுத்துக்கொண்டு சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து, அருகில் உள்ள மாவட்ட தலைமை தபால் நிலையம் வரை சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கையில் ரத்தம் சொட்டும் தலையுடன் பூமிநாதன் நடந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசாரை பார்த்ததும் தலையை வீசி எறிந்துவிட்டு தப்பிக்க முயன்றபோது, பூமிநாதனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.