
மூடும் நிலையில் பள்ளிகள்
கொரோனா பாதிப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியவில்லையென்று அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நிலை அதிகரித்து வருகிறது. மேலும் சுமார் இரண்டு வருடங்கள் வரை பள்ளிகள் சரியான முறையில் செயல்படாத காரணத்தால் பெரும்பாலான தனயார் பள்ளிகள் வருமானம் இன்றி மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டணங்களை தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. தனியார் பள்ளிகளுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கட்டணமாக கட்டண நிர்ணய குழு நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
குறைவான கட்டணத்தை நிர்ணயித்த தமிழக அரசு
இதே போல பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு கல்வி கட்டணமாக 10 ஆயிரம் ரூபாய் என கல்வி நிர்ணய குழு நிர்ணயித்துள்ளது. இது போன்ற குறைந்த கட்டணங்களை வாங்கிக்கொண்டு பள்ளிகளை நடத்துவது சிரமமான நிலை உள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளன்னர். எனவே அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டண நிர்ணயக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஜூன் மாதம் பள்ளி மூடல்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி நந்தகுமார், அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் அரசு செலவிடும் நிலையில் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்வது ஏற்க முடியாது என தெரிவித்தார். மேலும் கட்டண நிர்ணயக்குழு செயல்பாடு கண்டித்து ஒரு மாதம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் ஒரு வாரம் பள்ளிகள் மூடி தங்களது எதிர்ப்பை காட்ட இருப்பதாகவும் போராட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த போராட்டம் காரணமாக டிபிஐ வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.