
ஈரோட்டில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இதைதொடர்ந்து நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
அதன்படி ஈரோட்டில் அரசு ஊழியர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். திடீரென போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவரகளை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.