பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஓட ஓட வெட்டிக்கொலை; மர்ம கும்பல் தப்பியோட்டம்...

First Published Jan 6, 2018, 11:41 AM IST
Highlights
The owner of the rice estate in the barracks to run away Mystery gang flew ...


திருநெல்வேலி

திருநெல்வேலியில் பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஓட ஓட வெட்டி கொலை செய்த மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். தலைமறைவாகி உள்ள கும்பலை தேடும் பணியில் காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்கிற மோட்டார் முருகன் (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கமி‌ஷன் அடிப்படையில் மணல் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.

நாள்தோறும் காலையில் இவர் திருநெல்வேலிக்கு வந்து, ரியல் எஸ்டேட் தொடர்பான நண்பர்களை பார்த்துவிட்டு இரவில் வீட்டுக்கு செல்வது வழக்கம்.

நேற்று காலையும் வழக்கம்போல இவர், தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டைக்கு வந்தார். அங்குள்ள நண்பர்களை பார்த்துவிட்டு வேறு நண்பரை சந்திக்க சென்று கொண்டிருந்தார்.

இலந்தகுளம் சாலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு பேர் கொண்ட கும்பல், முருகனை பின்தொடர்ந்து வந்தது. அந்த கும்பல் முருகனை வழிமறித்து நிறுத்தி பேசினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தங்களிடம் இருந்த அரிவாளை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டியது. இதில் இரத்த காயங்களுடன் முருகன் அந்த கும்பலிடம் இருந்து உயிர் தப்பித்து ஓட முயன்றார். ஆனாலும், அவரை விடாமல் விரட்டிச்சென்ற அந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பிச்சென்றது.

அந்த கும்பல் வெட்டியதில் முருகனின் தலை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே முருகன் மடிந்தார்.

இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சுகுணாசிங், பாளையங்கோட்டை உதவி ஆணையர் விஜயகுமார், ஆய்வாளர் தில்லை நாகராஜன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் காவலாளர்கள், முருகனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பாளையங்கோட்டை காவலாளர்கள் வழக்குப்பதிந்து தொழில் போட்டியின் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் ரியஸ் எஸ்டேட் உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!