பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டி போராட்டம்…

 
Published : Nov 21, 2016, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டி போராட்டம்…

சுருக்கம்

கோவை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட கிளை சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை டாடாபாத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் மாவட்ட தலைவர் ப.வீராசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளர் ப.இரங்கநாதமூர்த்தி வரவேற்றார். நா.பழனிக்குமார், கே.இராமதிலகம், பி.தமிழ்ச்செல்வி, கே.ஜெயரத்னகுமார், சூ.ஆரோக்கியதாஸ், எஸ்.பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரத போராட்டத்தை அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் செ.சரவணன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் ப.கருப்புசாமி பேசினார்.

“புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பை சரிசெய்து, 7–வது ஊதியக்குழுவை உடனடியாக அமைத்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுப்பெற்று, பொதுவான கருத்தை மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கை விரைந்து முடித்து புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு பிறகு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கு, பின்னேற்பு ஆணை உடனடியாக வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிட தகவல்களை, ஒன்றியத்திற்குள் மட்டுமே செய்ய வேண்டும். பி.லிட். கல்வித்தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, பி.எட். உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

பி.காம். மற்றும் பி.ஏ. பொருளாதாரம் ஆகிய பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கு, உயர்கல்விக்கான ஊக்கஊதிய உயர்வு வழங்க வேண்டும். இளையோர், மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைவது தொடர்பான அரசாணைகளுக்கு எதிராக இயக்குனர் பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். ஆசிரியர்கள் பணியாற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பி.எட். கற்பித்தல் பயிற்சிக்கு சென்றாலும் விடுப்பு எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப்பெற வேண்டும்” என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பாளர் வி.எம்.மைக்கேல்ராஜ், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் தா.அருளானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.குமார் நிறைவு செய்து வைத்து பேசினார்.

முடிவில் எம்.பாபு நன்றி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!