
முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்புநாள், அனைவருக்கும் தாய்த்திருநாளாகும். அன்றை தினத்தை கொண்டாடி மகிழ்வோம் என வைகை செல்வன் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலோ, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதலமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், நேற்று முன்தினம் சாதாரண தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். நேற்று காலை முதல் அவருக்கு, பிசியோதெரபி நிபுணர் உடற்பயிற்சி அளித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து, அதிமுக செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான வைகைசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலத்துடன் இருக்கிறார். உடல்நல ஆரோக்கியம், இயற்கை சுவாசம், இயல்பான வாழ்க்கை, வழக்கமான உணவு, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் மதிநுட்பம், கருத்துகளை விரிவாக வெளிப்படுத்தும் விணை திட்பம், பத்திரிகைகளை உள்நோக்கும் விசாலமான பார்வையோடு இருக்கிறார். இதற்கெல்லாம் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துகள், வழிபாடுகள், பிரார்த்தனைகள் தான் காரணம்.
முதலமைச்சர் ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார். விரைவில் வீடு திரும்புவார்.
உங்களைப்போல நாங்களும் அந்த நிகழ்வுக்காக காத்திருக்கிறோம். முதலமைச்சர் ஜெயலலிதா மிக விரைவில் வீடு திரும்பி, கோட்டையில் கோப்புகளை பார்க்கக்கூடிய நாள் தான் எங்களுடைய நன்னாள், பொன்னாள், திருநாள். அந்த நாளை தாய்த்திரு நாளாக நாங்கள் கொண்டாடி மகிழ்வோம்.
அந்த தாய்த்திருநாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். முதல்மைச்சர் ஜெயலலிதா 100 ஆண்டு காலம் வாழ்ந்து தமிழ் உலகத்துக்கு தொண்டு ஊழியம் செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.