தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கன்னித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக ஆளுநர் ரவி தெரிவித்திருந்த நிலையில், இரு விரல் சோதனை நடைபெறவில்லையென தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மாணவிகளுக்கு இரு விரல் பரிசோதனை
தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 4 ஆம் தேதி ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்த ஆளுநர் ரவி, அறநிலையத்துறையின் கீழ் இல்லாத தில்லை நடராஜர் கோயிலில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்கப்பட்டதாகவும் ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை என தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்ததாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக சிறுமியர்களை அழைத்துச் சென்று 6,7-ம் வகுப்பு மாணவிகளுக்கு வலுக்கட்டாயமாக இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இரு விரல் சோதனை நடைபெறவில்லை
அதே நேரத்தில் இரு விரல் சோதனை எதுவும் மாணவிகளிடம் நடத்தப்படவில்லையென தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தில்லை நடராஜர் கோயிலில் தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவ குழுவினர் விசாரணை மேற்கொண்டு கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தை மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் இரு விரல் பரிசோதனை தொடர்பாகவும், குழந்தை திருமணம் தொடர்பாகவும் விசாரித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டதாகவும், விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் குழந்தை திருமணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இரண்டு நாட்களில் அறிக்கையை சமர்பிப்போம் என தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
இனி பாலியல் வழக்குகளில் இரு விரல் சோதனை நடத்த தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி..!