
நாகப்பட்டினம்
தனக்குச் சொந்தமான நிலத்தை தனது அண்ணன் மகனிடமிருந்து மீட்டுத் தர வேண்டும் என்று நாகப்பட்டினம் ஆட்சியரகத்தில் தீக்குளிக்க முயற்சித்தவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், டி.எம். கோயில் தெருவைச் சேர்ந்தவர் பி. கோதண்டராமன். இவர் கடந்த 28 -ஆம் தேதியிட்டு எழுதியிருந்த ஒரு கடிதம் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு சமீபத்தில் கிடைத்தது.
அந்தக் கடிதத்தில், "தரங்கம்பாடி வட்டம், அனந்தமங்கலம் என்ற ஊரில் தனக்குச் சொந்தமாக 55 செண்ட் நிலம் இருப்பதாகவும், தனது அண்ணன் கோவிந்தராஜூவின் பராமரிப்பில் இருந்த நிலத்தை, அவரது மறைவுக்குப் பின்னர் கோவிந்தராஜூவின் மகன் பெத்வேல் திருப்பித் தர மறுப்பதாகவும், இது தொடர்பாக வட்டாட்சியர் முதல் முதல்வரின் தனிப்பிரிவு வரை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், "தனக்குச் சொந்தமான நிலத்துக்கு தனது அண்ணன் மகன் பட்டா வகை மாற்றம் செய்ய முயற்சிகள் மேற்கொள்வதாகவும், தனக்கு நீதி கிடைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக தீக்குளிப்பேன்" எனவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து நாகூர் காவலாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று காலை கோதண்டராமன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரகம் வருவது குறித்துத் தகவலறிந்த நாகூர் காவலாளர்கள் ஆட்சியரகப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தனது மகன் கருணாகரனுடன் மாவட்ட ஆட்சியரக வளாகத்திற்கு வந்த கோதண்டராமன், ஒரு பையில் வைத்து எடுத்து வந்த மண்ணெண்ணெய் கேனை திடீரென எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது, அங்கிருந்த காவலாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து கோதண்டராமனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோதண்டராமன் நாகூர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.