இனி..கோயில் யானைகளுக்கு தடை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Mar 1, 2023, 11:54 AM IST
Highlights

இனிவரும் நாட்களில் கோவில்களிலோ, தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழ்நாடு வனத்துறை செயலர் உறுதி செய்ய மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த சேக்முகமதுவுக்குச் சொந்தமானது 56 வயதான லலிதா என்ற பெண் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், லலிதா யானைக்கு உரிமை கோரிய வழக்கில் யானையை அவரிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என்றும், யானையை முறையாக  பராமரித்து அது தொடர்பான அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அனுப்புமாறும் உயர்நீதிமன்ற மதுரைகளை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், யானை கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாகவும், அதற்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் கூறி விலங்கு நல ஆர்வலர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ச்சியாக யானை பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்ட நிலையிலும், யானைக்கு காயம் ஏற்பட்டது தொடர்பாக அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  வனவிலங்குகள் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை. விலங்குகளை வளர்ப்போர் அவற்றுக்கு எவ்விதமான வலியோ, பிரச்சனைகளோ ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை லலிதா யானைக்கு உரிய பராமரிப்பை வழங்குவது அரசின் கடமை. ஆகவே மருத்துவர் கலைவாணனை லலிதா யானை பராமரிப்பிற்கான சிறப்பு பணிக்காக ஒதுக்க வேண்டும்.

யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர் கலைவாணன் விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். முறையான மருத்துவமும், உணவும் யானைக்கு வழங்கப்பட வேண்டும். லலிதா யானை முழுமையாக குணமடைந்த பின் அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்பட வேண்டும். லலிதா யானைக்கு 60 வயது இருக்கக்கூடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், இனிவரும் காலங்களில் உணவும், பராமரிப்பு வழங்கி ஓய்வு எடுக்க செய்ய வேண்டும். லலிதா யானையை எவ்விதமான வேலைகளிலும் ஈடுபடுத்தக் கூடாது எனவும் நீதிபதி தெரிவித்து இருந்தார். லலிதா யானை தற்போது விருதுநகர் முத்து மாரியம்மன் கோவிலில் இருக்கும் நிலையில், யானைக்கு தொந்தரவு ஏற்படாத வகையில்  விருதுநகர் நகர காவல் ஆய்வாளர் உறுதிப்படுத்த வேண்டும் என  கேட்டுக்கொண்டார்.

கடந்த 2021ல் உயர்நீதிமன்றம் இனிவரும் நாட்களில் எந்த யானையும் வளர்ப்பை யானையாக மாற்றப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது பல இடங்களில் யானைக்கு முறையான கூரை, உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுவது இல்லை.  குடும்பத்தை விட்டு தனியே பிரித்து வளர்க்கப்படும் யானைகள், இதன் காரணமாக சில சமயங்களில் ஆக்ரோஷமாக மாறி பாகன்களை தாக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆகவே தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் அனைத்து கோவில்கள் மற்றும் தனியாரிடம் வளர்க்கப்படும் யானைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இனிவரும் நாட்களில் கோவில்களிலோ தனி நபர்களாலோ எவ்விதமான யானையும் வளர்ப்பு யானையாக மாற்றப்படக்கூடாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் அரசு மறுவாழ்வு ?முகாம்களுக்கு அனுப்பப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய இதுவே சரியான நேரம் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

click me!