
கிருஷ்ணகிரி
விதிமீறல்களால்தான் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது என்று கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.செங்குட்டுவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தது:
“கிருஷ்ணகிரி நகராட்சியில் அனைத்து ஏலமும் குறைந்த தொகைக்கே விடப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்க் குறைகிறது.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தனியார் புத்தக கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.
அதேபோல், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையத்தில் அதன் கட்டடத்தின் பாதுகாப்பு கருதி 19 கடைகள் மட்டுமே கட்டுவதற்கு வடிவமைப்பாளர்கள் அனுமதி அளித்தனர்.
தற்போது, யாருடைய அனுமதியுடம் பெறாமல் 40 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற விதிமீறல்களால்தான் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.