
சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகை அமலாபாலுக்கு கேரள போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை அமலா பால் தனியார் நிறுவனத்தில் இருந்து பென்ஸ் S- கிளாஸ் வகை கார் ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
ஆனால் அந்த காரை போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது.
கேரளாவின் கொச்சி நகரில் நிரந்தர முகவரி கொண்டுள்ள அமலா பால், புதுச்சேரியில் நிரந்தர முகவரி இருப்பதாக கூறி காரை பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடி அமலாபால் கார் விவகாரம் குறித்து 15 நாட்களில் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக்கு செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரத்தில் எந்த விதிமீறலும் இல்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகை அமலாபாலின் கார் வரி ஏய்ப்பு குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை அமைசர் ஷாஜகான் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது, வீட்டு முகவரி குறித்து அமலாபால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் புதுச்சேரி முகவரியில் எல்.ஐ.சி பாலிசியும் தாக்கல் செய்துள்ளார் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆனாலும் தற்போது சொகுசு கார் பதிவு மோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நடிகை அமலாபாலுக்கு கேரள போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.