Monsoon : தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரபிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ‘அசானி’ புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் அசானி புயல், கரீம் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு அந்தமான் நிக்கோபர் தீவுகளின் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை காலம் தொடங்குவதற்கான சாதகமான வானிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 15ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்நிலையில் அந்தமானில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. அடுத்த 5 நாட்களுக்கு அப்பகுதியில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.