
கோயம்புத்தூர்
ஒரு யூனிட் மணல் விலையை ரூ.500–ஆக நிர்ணயம் செய்து, தமிழக அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும் என்று கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டிட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வலியுறுத்தினர்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஹரிகரன் தலைமை தாங்கினார்.
இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொண்டுவந்து ஆட்சியரிடம் கொடுத்தனர்.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் திரளாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கு சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பின்னர், அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–
“கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக கட்டுமான பணிகள் முடங்கி கிடக்கின்றன. எனவே, ஒரு யூனிட் மணல் விலையை ரூ.500–ஆக நிர்ணயம் செய்து, தமிழக அரசே நேரடியாக மணல் விற்பனை செய்ய வேண்டும்.
விபத்து மற்றும் மரணத்திற்கு ரூ.10 இலட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.5 இலட்சம், திருமண உதவி ரூ.1 இலட்சம், மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் என கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.
வடமாநில தொழிலாளர்களின் வருகையால் இங்குள்ள கட்டுமான தொழிலாளர்களின் வேலை பறிபோய்விட்டது. வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.
மேலும், கட்டிட தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க மாவட்ட கட்டுமான தொழில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.