
தருமபுரி
கூட்டுறவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“ஓய்வூதியம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் நரசிம்மன், பொருளாளர் அசோகன், துணைத் தலைவர்கள் மதிவாணன், ரவி, இணை செயலாளர்கள் செந்தில்குமார், பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி பணியாளர்கள், ரேசன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், “தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க பணியாளர்கள், ரேசன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் தொடர்பாக குழு அமைத்து அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைத் தொடர்பாக உரிய அரசாணையை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
கூட்டுறவு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மே மாதம் 22–ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானத்திருப்பதாக ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்க நிர்வாகிகள் எச்சரித்தனர்.