
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக புகார் எழுந்தது.
இதற்கு ஆதாரமாக சி.பி.ஐ. இயக்குநர் இல்லத்தின் வருகைப் பதிவேடும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்து பேசிய ஆதாரங்கள் இருந்தன.
இதையடுத்து நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.