
விவசாயிகளுக்கு ஆதரவுத் தெரிவித்து நேற்று ஒருநாள் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் ஓசூரில் மட்டும் ரூ.150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,
விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” உள்ளிட்ட் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 41 நாள்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், கடைசி வரை அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.
அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவுத் தெரிவித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டன.
ஓசூரில் நேதாஜி சாலை, காந்தி சாலை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள், ஓசூரில் தாலுகா அலுவலகம் அருகில் உள்ள உழவர் சந்தை மூடப்பட்டன.
நேற்று ஆட்டோக்கள் ஓடவில்லை என்றாலும் அரசு, தனியார் பேருந்துகள், லாரிகள் வழக்கம் போல இயங்கின.
ஓசூரில் 2000-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டே கிடந்ததால் உற்பத்தி, சரக்குகள் அனுப்புதல், மூலப்பொருட்களை கொண்டுவருதல் போன்ற பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ஓசூரில் ரூ.150 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்புப் போராட்டத்தை முன்னிட்டு ஓசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் நகர் முழுவதும் பாதுகாப்புப் பணியில் குவித்து வைக்கப்பட்டிருந்தனர்.