
ஓசூர்,
ஓசூர் அருகே 61 காட்டு யானைகள், ஏரியில் ஆனந்த குளியல் போட்டதை ஊர்மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து புகைப்படம் எடுத்தனர். பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு துரத்தினர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வருவது வழக்கம்.
ராகி பயிர் அறுவடையை குறிவைத்து வரக்கூடிய இந்த யானைகள், தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் தங்கி, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விவசாய பயிர்களையும் உட்கொள்ளும்.
இந்த ஆண்டும் அதேபோல நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. அதில் 40 யானைகள் சவளகிரி காட்டில் உள்ளன.
இதைத் தவிர 61 யானைகள் ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர் வனப்பகுதிகளில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் போடூர் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 61 யானைகளும் உணவுக்காக வெளியே வந்தன.
பின்னர் யானைகள் அருகில் உள்ள போடூர், இராமாபுரம், ஆழியாளம், பன்னப்பள்ளி, குக்கலப்பள்ளி, பிள்ளை கொத்தூர், திருமலைகோட்டா உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றன.
அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி, நெல், தக்காளி, பீன்ஸ். முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்தன.
இதைத்தொடர்ந்து 61 யானைகளும் நேற்று அதிகாலை பிள்ளை கொத்தூர் ஏரிக்குச் சென்றன. அங்கு ஏரி முழுவதும் நீர் ததும்ப இருந்ததை கண்டு மகிழ்ந்த யானைகள் ஏரிக்குள் இறங்கி ஆனந்த குளியல் போட்டன.
மேலும் தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி, ஒன்றன் மீது ஒன்று பீய்ச்சி அடித்து விளையாடியது.
இதற்கிடையே யானைகள் பிள்ளை கொத்தூர் ஏரிக்கு வந்த தகவல் அறிந்ததும் ஊர்மக்கள், இளைஞர்கள் பலரும் அங்கே சென்றனர். அவர்கள் ஆர்வம் மிகுதியால் யானைகளை புகைப்படம் எடுத்தனர். நீண்ட நேரம் குளித்த யானைகள் பின்னர் கரைக்கு வந்தன. இந்த நிலையில் யானைகள் வந்த தகவல் அறிந்ததும், வனத்துறையினர் பிள்ளைகொத்தூர் ஏரிக்கு வந்தனர்.
அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகளை விரட்டினார்கள். இதைத் தொடர்ந்து 61 யானைகளும் குக்கலப்பள்ளி, இராமாபுரம் கிராமங்கள் வழியாக போடூர் வனப்பகுதிக்கு சென்றன. யானைகள் கிராமங்கள் வழியாக கூட்டமாக சென்றதை ஏராளமான ஆண்களும், பெண்களும் வேடிக்கை பார்த்தனர்.
தற்போது போடூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, ஓசூர் – இராயக்கோட்டை சாலை வழியாக சானமாவு வனப்பகுதிக்கு துரத்தி, அங்கிருந்து ஊடேதுர்க்கம் வழியாக சவளகிரி வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.