
திருவள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவியர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு பிளஸ் 2 வரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இங்கு பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பயன்படுத்துவதற்காக 10 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ. 2, 500 யை மாதத்தவணையாக தமிழக அரசு வழங்கி வருகிறது.
இருந்தபோதிலும் கடந்த 24 ஆம் தேதி மாணவிகள் 2 பேரை அழைத்த தலைமை ஆசிரியர் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். கழிப்பறையை சுத்தம் செய்யாவிட்டால், பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாது என, மிரட்டியதாக தெரிகிறது.
இதனால், மாணவிகள் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி அழுதபடியே கைகளால் கழிப்பறையை சுத்தம் செய்தனர்.
இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவின் பேரில் முதன்மை கல்வி அலுவலகர் ராஜேந்திரன் பள்ளியில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து தலைமை ஆசிரியை மணிமேகலை மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைதொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.