
வழக்கமாக திருடர்கள், போதையில் ரகளை செய்பவர்கள், கொள்ளையர்கள், பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்கள், ஊர் பஞ்சாயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களை என்பவர்களை மட்டுமே கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பார்கள்.
ஆனால், போதையில் ரகளை செய்த போலீஸ்காரரை, பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி வெளுத்து வாங்கிய சம்பவம், நமது தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அமரகுந்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவரது மகன் மகேந்திரன் (30). சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றுகிறார். இவரது மனைவி சாரதா, அமரகுந்தியில் உள்ள முத்துசாமி வீட்டில் உள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சாரதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக மகேந்திரன் சொந்த ஊர் சென்றார்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக மகேந்திரன், நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். நண்பர்கள் 4 பேருடன் பெரியேறிப்பட்டு தாண்டானூரில் உள்ள கோயிலில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த மக்கள், கோயிலில் மது அருந்த கூடாது என கண்டித்துள்ளனர். இதை பொருட்படுத்தாத மகேந்திரன், “நான் யார் தெரியுமா. ஒரு போலீஸ்காரனுக்கே எச்சரிக்கை செய்கிறீர்களா” என கேட்டு அப்பகுதி மக்களிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார்.
மேலும், “நான் ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது” என கூறிய அவர், தகாத வார்த்தையால் பொதுமக்களை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மகேந்திரனை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அவரது நண்பர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து மகேந்திரனை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, வெளுத்து வாங்கினர்.
தகவலறிந்து, தவுசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மகேந்திரனை மீட்டு அழைத்து செல்ல முயன்றனர். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த மக்கள், உயரதிகாரிகள் உடனடியாக வர வேண்டும். மகேந்திரன் மற்றும் அவருடன் வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் மகேந்திரன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் கையெழுத்து வாங்கினர். அதன்பின்னரே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.