
மோகனூர்,
மோகனூரில் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால், பொதுக் கிணற்றில் நீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
மோகனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட என்புதுப்பட்டி ஊராட்சியில் உள்ளது சங்களாபுரம். இங்கு 200 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை மோகனூர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரளாய் வந்து முற்றுகை இட்டனர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், தேன்மொழி ஆகியோரிடம் மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அந்த ,மனுவில், “என்புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சங்களாபுரத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த சுமார் 900–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இங்கு உள்ள ஊராட்சி ஆழ்துளை கிணறு மூலம் ஜங்களாபுரம் பொதுமக்களுக்கு தேவையான குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஊராட்சி ஆழ்துளை கிணற்றின் அருகில் விவசாயி ஒருவர் அவரது விவசாய நிலத்தில், புதிதாக ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்க முயன்றபோது ஊர் பொதுமக்கள் தடுத்தும் கேட்காமல் ஆழ்துளை கிணறு அமைத்து மோட்டார் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் ஆழ்துளை கிணறு அமைத்ததால், பொதுமக்களுக்கு குடிக்க கூட தண்ணீர் இல்லை.
அரசு விதியை மீறி உரிய அனுமதி பெறாமல் அவர் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து தண்ணீர் எடுத்ததால் அருகில் உள்ள ஊராட்சி ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை.
எனவே அரசு விதியை மீறிய அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.