பணத்தை திருப்பி கேட்ட வாடிக்கையாளரை கொச்சைப்படுத்திய கூட்டுறவு சங்கம்; நீதிமன்றம் சொன்ன அசத்தல் தீர்ப்பு...

Asianet News Tamil  
Published : Jun 23, 2018, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
பணத்தை திருப்பி கேட்ட வாடிக்கையாளரை கொச்சைப்படுத்திய கூட்டுறவு சங்கம்; நீதிமன்றம் சொன்ன அசத்தல் தீர்ப்பு...

சுருக்கம்

The Co-operative Credit Association Court case

திண்டுக்கல்
 
போட்ட பணத்தை திருப்பி கேட்ட வாடிக்கையாளரை தகாத வார்த்தைகளால் திட்டி கொச்சைப்படுத்திய கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பணத்திற்கு வட்டி மற்றும் ரூ.18 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த கூத்தன் என்பவரின் மகன் வேல்மயில். இவர், கடந்த 6–4–1990 அன்று காந்திகிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 20 ஆண்டுகள் வைப்புத் தொகையாக ரூ.15 ஆயிரம் செலுத்தினார். 

அப்போது, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையாக ரூ.1 இலட்சத்து 75 ஆயிரத்து 876 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 6–4–2010 அன்று முதிர்வு தொகையை பெற கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றார். அப்போது, ஆறு மாதங்கள் கழித்து தருவதாக தெரிவித்தனர். 

அதன்படி ஆறு மாதங்கள் கழித்து சென்று கேட்டபோது வேல்மயிலை தகாத வார்த்தைகளால் அசிங்கமாக திட்டி அனுப்பிவிட்டனர் காந்திகிராமம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த அதிகாரிகள். 

இதனைத் தொடர்ந்து, 2014–ஆம் ஆண்டு வழக்குரைஞர் மூலம் சுற்றறிக்கை அனுப்பினார் வேல்மயில். அதற்கும் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் உரிய பதில் தரப்படவில்லை. 

மிகுந்த மன உளைச்சல் அடைந்த வேல்மயில் கடந்த 27–3–2015 அன்று கூட்டுறவு கடன் சங்கம் மீது திண்டுக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

இரு தரப்பினரையும் விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன், உறுப்பினர்கள் சேக் அப்துல் காதர், முத்துலட்சுமி ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

அந்த தீர்ப்பில், "வாடிக்கையாளருக்கு முதிர்வு தொகையை வழங்காமலும், உரிய பதில் அளிக்காமலும் இருப்பது சேவைக் குறைபாடாகும். எனவே, முதிர்வு தேதியில் இருந்து வழக்கு தொடர்ந்த நாள் வரை முதிர்வு தொகையுடன் 7 சதவீத வட்டியும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

இதேபோல, 28–3–2015 முதல் பணத்தை கொடுக்கும் நாள் வரை முதிர்வு தொகைக்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.3000 என மொத்தம் ரூ.18 ஆயிரத்தை வாடிக்கையாளருக்கு நஷ்ட ஈடாக கூட்டுறவு கடன் சங்கம் வழங்க வேண்டும்" என்று அதிரடி தீர்ப்பு வழங்கினர்.

PREV
click me!

Recommended Stories

தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!
அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. அசராமல் சாட்டையை சுழற்றும் இபிஎஸ்!