இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறினார். எனவே உடலை இன்றைக்கே அடக்கம் செய்ய வேண்டும் என நீதிபதி கூறினார்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி கோரி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முடிவும் தெரிவிக்காததால், கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று காலை நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு காணொலி காட்சி மூலம் இன்று காலை 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்?
அப்போது ஆம்ஸ்ட்ராங்கை உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அந்த பகுதியில் இருப்பவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஆம்ஸ்ட்ராங்க் உடலை அங்கு அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து அரசு தரப்பில் வாதிடுகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள இடம் என்பது மிகவும் குறுகலானது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது. இங்கு 16 அடி சாலை தான் உள்ளது. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 200 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதி ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது என கேள்வி எழுப்பினார்.
அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம்
மேலும் நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள். பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் 12 மணியளவில் நடைபெற்றது. அப்போது விஜயகாந்துக்கு அவரது நிலத்திலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதேபோல அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு கோரிக்கை விடுக்கப்பட்டது. புதிய இடத்தில் அடக்கம் செய்வது தொடர்பாக அரசிடம் புதிய மனு அளிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
குடியிருப்பு பகுதியில் அடக்கமா.?
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இறந்த நபர் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். உடலை பள்ளியில் வைத்திருக்க முடியாது, நாளை பள்ளி திறக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கூறினார். எனவே உடலை இன்றைக்கே அடக்கம் செய்ய வேண்டும் என கூறினார். மேலும் பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7,500 சதுர அடி நிலமும் குடியிருப்பு பகுதி தான், அதில் எப்படி அனுமதி வழங்க முடியும்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். ராஜிவ்காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. ஆனால் உடல் தகனம் செய்யப்பட்டது டில்லியில், அதேபோல உடலை அடக்கம் செய்து விட்டு பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டலாம். குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஒதுக்குபுறமாக, விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள் அந்த இடத்தை வாங்கி அரசு அனுமதி பெறலாம் என தெரிவித்தார்.
மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு
நல்ல இடத்தில் மணி மண்டபம் அமைக்கலாம். அம்பேத்கர் மணிமண்டபம் போல விசாலமான இடமாக இருக்க வேண்டும்.எதிர்காலத்தில் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தாலும் இடையூறுகள் இருக்க கூடாது என நீதிபதி தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர தயாராக இருக்கிறார். அங்கு மணிமண்டபம் அமைக்கலாம் என அரசுத்தரப்பு தெரவிக்கப்பட்டது. எனவே மாற்று இடம் குறித்து பிற்பகல் 2:15க்கு தகவல் தெரிவியுங்கள் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி தரப்பு அறிவுறுத்தி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.