
தூத்துக்குடி
சல்லிக்கட்டுக்கு ஆதரவுத் தெரிவித்தும், நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும்பாலான நாட்டு படகுகள், விசைப்படகுகள், கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தன.
தூத்துக்குடி மாவட்டத்தில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக 17 இடங்களில் மாணவர்களின் போராட்டம் தொடந்து நடைப்பெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததுடன் முழு கடையடைப்பு நடத்தி அவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
சல்லிக்கட்டு போட்டியை நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று இந்தாண்டும் மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட இளைஞர்கள், மக்கள் பட்டாளம் எல்லாரும் தாங்களே போராட்டத்தில் இறங்கினர்.
ஆரம்பத்தில் சிறிய கூட்டமே இருந்ததால் தடியடி நடத்தி கூட்டத்தை களைக்க முற்பட்ட அரசு காவலாளர்கள் போராட்டம் வீரியம் அடைவதைக் கண்டு அடங்கினர்.
வெளிநாட்டைச் சேர்ந்த பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் சுமார் 89 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் கடைக்கள் அடைக்கப்பட்டு போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.
தூத்துக்குடியில் பெரும்பாலான தனியார் பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓடவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பெரும்பாலான விசைப்படகுகள், நாட்டு படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மத்தியில் பேசினார்கள். பின்னர் மருத்துவமனைக்குச் சென்ற அவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு பணியாற்றினர். மருத்துவ துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது. விடுமுறை வழங்காத கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள். அரசு ஊழியர்கள், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து, மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
கோவில்பட்டி, கழுகுமலை, விளாத்திக்குளம், எட்டயபுரம், திருச்செந்தூர், ஏரல், ஆழ்வார்திருநகரி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி, மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களிலும் கடையடைப்பு, பேரணி என்று பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன.