
விழுப்புரம்
விழுப்புரத்தில் பயிர் காப்பீட்டு திட்ட தொகையை காசோலையாக வழங்காமல் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பென்னகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் 192 பேருக்கு பயிர் காப்பீட்டு தொகை அனுமதிக்கப்பட்டு இருந்தது.
இதில் ஏற்கனவே 40 பேருக்கு காப்பீட்டு தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உரிய தொகை காசோலையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பென்னகர் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயிகள், "பயிர்காப்பீட்டு தொகையை காசோலையாக வழங்கினால் வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு தொடங்கித்தான் பணத்தை பெற முடியும் என்பதால் சிரமம் ஏற்படும். எனவே, எங்களுக்கு பணத்தை ரொக்கமாகவே வழங்க வேண்டும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த வளத்தி காவல் ஆய்வாளர் ஐயப்பன், கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி, செயலாளர் மூர்த்தி, தனிப்பிரிவு காவலர் குமரேசன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடமும், கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளிடமும் தொடர்பு கொண்டு பேசினர்.
பின்னர், பயிர்காப்பீட்டு தொகை நாளை மறுநாள் (அதாவது வியாழக்கிழமை) ரொக்கமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.