
சேலம்,
சேலம் மாவட்டத்தில் இரண்டாவது நாள் வரிய அமைதியாக நடந்த போராட்டம், பிரதமர் மற்றும் முதல்வரின் திருப்தி அளிக்காத பேச்சால் இரயில் மறியல் போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது.
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ – மாணவிகள் மற்றும் இளைஞர்களும் கூடி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆதரவுத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான, தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகளும், பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் நேற்று மதியம் சேலம் நகர இரயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அவர்கள், சல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பி இரயில் நிலையத்திற்கு சென்றதும், தண்டவாளத்தில் மாணவ – மாணவிகள் படுத்துக்கொண்டனர்.
இதையடுத்து அங்கு வந்த இரயில்வே காவலாளர்கள் மற்றும் மாநகர காவலாளர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களின் பேச்சை மாணவர்கள் கேட்க மறுத்துவிட்டனர்.
இதனிடையே, காரைக்கால் – பெங்களூரு பயணிகள் இரயில், சேலம் நகர இரயில் நிலையத்திற்கு வந்தடைந்தபோது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திடீரென அந்த இரயிலையும் மறித்து என்ஜின் மீது ஏறி சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று முழங்கினர்.
பிறகு அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கிருந்து ஜங்ஷன் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது.
அதேசமயம், மறு மார்க்கத்தில் சேலம் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு –காரைக்கால் பயணிகள் இரயில் புறப்பட்டு வந்தது. அப்போது, நகர சந்தை இரயில் நிலையத்தை கடந்து பெரியார் மேம்பாலம் அருகில் இரயில் வந்தபோது, ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் திரண்டு வந்து இரயிலை மறித்தனர்.
இதுபற்றி தகவலறிந்த சக மாணவ – மாணவிகளும், இளைஞர்களும் அங்கு திரண்டு இரயில் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்தும், இரயிலின் என்ஜின் மீது ஏறியும் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
இரயில் மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த இரயில்வே காவலாளர்களும், சேலம் மாநகர காவலாளர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் எதையும் கேட்காமல் சல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தனர்.
மாணவர்களில் சிலர் பறை அடித்து போராட்டத்தை மேலும் உற்சாகப்படுத்தினர். இதனால் பெரியார் மேம்பாலம் அருகில் எங்கு பார்த்தாலும் மாணவர்கள் கூட்டமாக காணப்பட்டது.
இதனிடையே, சேலம் அம்மாபேட்டை அடுத்துள்ள மன்னார்பாளையம் சத்யாநகரை சேர்ந்தவர் ராஜா மகன் லோகேஷ் (17). இவர், கூலிவேலை செய்து வருகிறார். சல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இவர் தனது நண்பர்களுடன் நேற்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்தார்.
அப்போது, இரயில் மறியல் போராட்டம் பற்றி அறிந்த லோகேஷ் உடனடியாக பெங்களூரு – காரைக்கால் பயணிகள் இரயிலின் மீது ஏறி மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த சமயத்தில் உயர் மின் அழுத்தம் காரணமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக மாணவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்னர், அங்கு உடல் கருகிய நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.