
ஜவுளி பொருட்கள் மீதான சேவை வரியை நீக்கக்கோரி வரும் 30 ஆம் தேதி கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனப்படும் ஒரே சீரான வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல்அமல்படுத்தப்பட உள்ளது.
ஒரே சீரான வரி விதிப்பு முறைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சில பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாக உள்ளதாக புகார் எழுப்பப்பட்டுள்ளது.
ஜவுளித் துறைக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜவுளி துறைக்கு அளிக்கப்பட்ட வரி விதிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று ஜவுளி வணிகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், ஜவுளி பொருட்கள் மீதான சேவை வரியை நீக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும என்று சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட கைத்தறி ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர்.
வரும் 30 ஆம் தேதி அனைத்து ஜவுளி நிறுவனங்களிலும் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும், ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.