
கிருஷ்ணகிரி
குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும், ஆபாசமாகவும் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இளைஞரை கைது செய்ய கோரி கிருஷ்ணகிரியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள குன்னத்தூரை அடுத்த முக்கரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடேசன் (19). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வெங்கடேசன் சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாகவும் ஆபாசமாகவும் பேசிய காட்சி வைரலாக பரவியது.
இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த குன்னத்தூர் பகுதி அனைத்து சமுதாய தலைவர்களும், சமூக வலை தளத்தில் அவதூறாக பேசிய வெங்கடேசனை கைது செய்ய கோரி சாமல்பட்டி காவலாளர்களிடம் புகார் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கிராமத்தில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இது பற்றி அறிந்ததும் சாமல்பட்டி காவலாளர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க காவலாளர்கள் குன்னத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இது சம்பந்தமாக வெங்கடேசனை பிடிக்க காவலாளர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.