தனிநபருக்காக கோவில் திருவிழாவுக்கு தடை; ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை...

First Published Apr 17, 2018, 9:21 AM IST
Highlights
Temple Festival banned for individual person Village People siege collector Office


திருநெல்வேலி
 
திருநெல்வேலியில், தனிநபருக்காக கோவில் திருவிழாவுக்கு காவலாளர்கள் தடை விதித்தை கண்டித்து கிராம மக்கள் திரளாக வந்து ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். 

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. 

ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.  இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

அப்போது, விக்கிரமசிங்கபுரம் ஊர் மக்கள் ஏராளமானோர் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் ஊரில் கோவில் திருவிழா நடத்த அனுமதி மறுத்ததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தையொட்டி ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் பால்துரை, வேல்கனி மற்றும் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "பாபநாசம் பாபநாசசுவாமி கோவிலில் நாங்கள் ஆண்டு தோறும் 8-ஆம் திருவிழா நடத்தி வருகிறோம்.  இந்த விழாவில் வழக்கம்போல சப்பரபவனி நடக்கும். அப்போது மேளதாளம், இசை வாத்தியங்கள் முழங்கப்படும். அப்படிதான் இந்த ஆண்டும் திருவிழா நடந்தது. 

இரவு 11 மணி ஆகிவிட்டதால் மேளதாளம் முழங்கக்கூடாது என்று கூறி காவலாளர்கள் சப்பர பவனிக்கு தடை செய்தனர். மேலும், ஒரு தனிநபர் இந்த வழியாக சப்பரம் செல்லக் கூடாது என்று கூறினார். அவருடைய பேச்சைக் கேட்டு எங்கள் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்துள்ளனர். 

இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். சப்பரம் செல்லக்கூடாது என்று கூறிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விக்கிரமசிங்கபுரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று அதில் கூறி உள்ளனர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!