
ஆர்.கே.நகரில், நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தொகுதியில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை அன்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், டிடிவி தினகரன், உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.
ஆர்.கே.நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த இடைத் தேர்தல், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்போடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆனாலும், ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக
சென்னை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாது, ஆர்.கே.நகரில் இதுவரை லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைதும் செய்யப்பட்டுள்ளனர். நூதன முறையிலும் அதாவது, ஆர்.கே.நகர் மக்கள் தங்கள் பொருட்களை அடகு வைத்திருக்கும் சேட்டு கடையில், அடகு பொருளின் சீட்டைக் கொடுத்தால், அதனை தினகரன் ஆதரவாளர்கள் மீட்டு கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாளை மறுநாள் ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 21 ஆம் தேதி மாலை வரை ஆர்.கே.நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான 24 ஆம் தேதி அன்றும் ஆர்.கே.நகரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.