
டாஸ்மாக் வழக்கு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கியது. அதில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதனையடுத்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆஜராகி டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2014 – 21 காலகட்டத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை 41 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது.
அமலாக்கத்துறை வாதம்
ஆனால், தற்போது, 2025-ம் ஆண்டு இந்த வழக்கில் அமலாக்கத் துறை நுழைந்து சோதனை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை விசாரணையில் அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களது தனியுரிமை பறிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டனர்.அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது. அமலாக்கத்துறை இந்த வழக்கை நியாயமாக விசாரித்து வருகிறது என்றார்.
வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளது அமலாக்கத்துறை
இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும்போது, அமலாக்கத்துறை இந்த வழக்கை ஏன் விசாரணை செய்ய வேண்டும். அமலாக்கத்துறை இந்த வழக்கில் அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். தனி நபர் வழக்கு என்பது வேறு. ஆனால் நிறுவனத்திற்கு எதிராக எவ்வாறு கிரிமினல் வழக்கை பதிவு செய்ய முடியும்? அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.