
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமென, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி சென்னைக்கு பி.ஆர்.பாண்டியன் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை மாவட்டம்தோறும் சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், “தமிழ்நாட்டில் அனைத்து நீராதாரங்களும் வறண்டு விட்டன. விளை நிலங்கள் பாலைவனமாக மாறி வருகின்றன. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் 12 ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய வகையில் ரூ.340 கோடி ரூபாய் நிலுவைத் தொகையாக உள்ளது. அதனை விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை (அக்டோபர் 24) தமிழக நிதி அமைச்சரை கரும்பு விவசாயிகளுடன் சந்திக்க உள்ளேன். தீபாவளிக்குள் அந்தத் தொகை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
காவிரி நீர் பிரச்னைக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராடினால் நமது உரிமைகளை மீட்க முடியும் என்பதை, அண்மையில் நடத்தப்பட்ட இரயில் மறியல் போராட்டம் நிரூபித்துள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.