
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள, பீகாரைச் சேர்ந்த, தேர்தல் செலவின பார்வையாளர் கரூர் வந்துள்ளார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 19–ஆம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து தேர்தல் பணிகள் மிகவும் விரைவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக பீகார் மாநிலம் ஹாஜ்டிர் மாவட்டத்தில் மத்திய கிழக்கு இரயில்வேயில் முதன்மை கணக்கு அலுவலகத்தில், துணை நிதி ஆலோசகராக பணியாற்றி வரும் சில்ஆஷிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஞாயிற்றுக் கிழமை கரூர் வந்தார். பின்னர் கரூர் அருகே உள்ள காகித ஆலை விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) முதல் அவர் தனது பணிகளை தொடங்க உள்ளார். இந்த நிலையில் கரூர் வந்த தேர்தல் செலவி பார்வையாளரை கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் நேரில் சென்று வரவேற்றார். இவரது பொறுப்பு அலுவலராக வட்டார வளர்ச்சி அதிகாரி முரளிகண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.