உதயநிதி ஸ்டாராக இருப்பதால் விளையாட்டுத்துறை ஸ்டாராகி விட்டது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

By Manikanda Prabu  |  First Published Oct 12, 2023, 8:57 PM IST

தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்


ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை ஸ்டார் துறையாக வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர்.

Tap to resize

Latest Videos

சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த 20 வீரர் - வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.9 கோடியே 40 இலட்சத்துக்கான காசோலைகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் அவர்களை வாழ்த்தினார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். மேலும், இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறை 'ஸ்டார்' துறையாக வளர்ந்து வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

“எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசானது, அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

குழந்தையை கொல்ல முடியாது: கருக்கலைப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!

இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்.” என புகழாரம் சூடினார்.

சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.  ஆசிய விளையாட்டு போட்டியில், 28 தங்கம் உள்பட 107 பதக்கங்களை இந்திய அணி வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா 107 பதக்கங்களை வென்றது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு, 70 பதக்கங்கள் வென்றதே சிறந்த சாதனையாக இருந்தது.

வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வரும் நிலையில், ஆசிய  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விழா எடுத்து ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவப்படுத்தியுள்ளார்.

click me!